அன்று ஆதிவாசி இளைஞர் ஒருவர் சாப்பாடு திருடியதாக அடித்துக்கொல்லப்பட்ட கேரளாவில் தற்போது எந்த தவறும் செய்யாத அப்பாவி நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் படுத்து உறங்கியுள்ளார். தூங்கி எழுந்து பார்த்த போது அவர் வைத்திருந்த பணப்பையும், செல்போனும் காணாமல் போயுள்ளது.

பின்பு பணத்தினை பறிகொடுத்த நபர் சில அங்க அடையாளங்களைக் கூறிவிட்டு, அவர் தான் திருடியுள்ளார் என்று அங்கிருந்த சில ஆட்டோ சாரதியிடம் கூறவே, அவர்களும் குறித்த நபரிடம் தான் அழைத்துச்செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

திருடியதாக கூறப்பட்ட நபரின் பெயர் அஜீஸ் என்பதும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. குறித்த அப்பாவி நபரைக் கடத்திய அந்த கும்பல் திருடிய பையைக் கொடுக்க வேண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரோ, தான் திருடவில்லை என்று கதறியுள்ளார். இதனை சற்றும் காது கொடுத்து கேட்காத கும்பல் குறித்த நபரை கொலை செய்து வயல்வெளியில் தூக்கி வீசியுள்ளனர்.

திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லம் பகுதியில் வயக்காட்டில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடப்பதாகவும், அவரை நாய்கள் கடித்துக் குதறி கொண்டிருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று அஜிஸை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என்று கூறியதோடு கால் உடைக்கப்பட்டுள்ளதென்றும், ஆணுறுப்பில் தீ வைத்து சுடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ரத்த காயத்துடன் அஜிஸை ஆட்டோவில் ஏற்றிய போது அந்த கும்பலை சில நபர்கள் காணொளி எடுத்ததை வைத்து பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு அப்பாவி இளைஞர் இவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!