அமெரிக்க ஏவுகணைக்கு பலியான ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானிக்கு அவரது சொந்த ஊரான கெர்மனில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கறுப்பு உடை அணிந்து அமெரிக்காவுக்கு எதிராக முழக்கமிட்ட மக்கள், அமெரிக்காவின் கொடிகளையும் எரித்துள்ளனர்.

மேலும், கொல்லப்பட்ட தளபதி குவாசிமின் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். எங்கள் தளபதியின் இழப்பு மிகவும் கசப்பானது. எங்களின் தொடர்ச்சியான நடவடிக்கை மற்றும் இறுதி வெற்றி கொலைகாரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இதைவிட மிகவும் கசப்பானதாக இருக்கும் என ஈரானின் உன்னத தலைவர் காமேனி அறிவித்துள்ளார்.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியும் குவாசிமுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார், ‘சுலைமானியின் அநியாய படுகொலைக்கு கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்’ என்று ஹடாமி சபதம் செய்துள்ளார்.

இதனிடையே ஈராக்கில் தங்கியுள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களும் உடனடியாக சொந்த நாடு திரும்ப வேண்டும் எனவும், விமானம் மார்கத்தை தவறவிடும் மக்கள் அண்டை நாடுகளின் தரை மார்கமேனும் பயணம் மேற்கொள்ள தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவும் சீனாவும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவைக் கண்டித்துள்ளன. மாஸ்கோ இந்த விவகாரம் தொடர்பில் ‘வளர்ந்து வரும் பதட்டங்களுக்கு வழிவகுக்கும் ஒரு சாகச நடவடிக்கை’ என்று எச்சரித்தது.

சீனா ‘மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

சீனா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் பேசியதை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

Sharing is caring!