பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கா என்று பார்க்க, தீக்குச்சியை உரசிப்போட்டால் எப்படி இருக்கும்? லெபனானில் நடந்தது!

பூமியே இரண்டாக பிளக்கும் அளவுக்கு வெடிவிபத்து நடந்த வீடியோவை, வாட்ஸ்ஆப்பில் நண்பர் அனுப்பியிருந்தார். இந்த மாதிரியான வெடிப்பு சம்பவத்தை இதுவரைக்கும் நான் டீவியில் கூட பார்த்தது இல்லை என்பதால், பார்த்து முடிப்பதற்குள் ஒருவித பய உணர்வு என்னை தொற்றிக்கொண்டது. அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன ஆயிருக்குமோ? பார்க்கும் நமக்கே, ஒரு மாதிரி உடல் சிலிர்க்கிறது. இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த சம்பவம் குறித்து தேட ஆரம்பித்தேன்.

ஜப்பானில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டின் தாக்கத்தில், ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு இந்த வெடிப்பு சம்பவம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாம். 2014 ஆம் ஆண்டில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்தை கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர். அதுவும் 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் என்றால், எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும். இவர்கள் ஏதோ உப்பு மூட்டையை அடுக்கி வைத்துள்ளோம் என்ற நினைப்பில், அசால்டாக இருந்துள்ளனர்.

கிடங்கின் ஒரு பகுதியில் ஏற்பட்ட துளையை அடைக்க, வெல்டிங் வைக்கும் போது பறந்த தீப்பொறி பட்டு, வெடி விபத்து நடந்ததாக அந்நாட்டு இணையதளங்கள் சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்தேன். அரசு கணக்குப்படி 73 பேர் பலியானதாகவும், 3000 மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டாலும், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்களை காணவில்லை என்ற தகவலும் ஒரு பக்கம் கசிந்துள்ளது.

வெடிசத்தம் 200 கிலோமீட்டர் வரைக்கும் கேட்டுள்ளது என்றால், பாதிப்பின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கும் என்று பாருங்கள். இதனால் உண்டான அதிர்வலையால், பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீடுகள் கூட குலுங்கின, சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறி துள் துளாகிப்போனது. பூகம்பம் வந்த அளவுக்கு, மக்கள் அதிர்வை உணர்ந்தனர். பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கா? என்று பார்க்க தீக்குச்சியை உரசி உள்ளே போட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி அம்மோனிய நைட்ரேட் வைத்துள்ள குடோனில் வெல்டிங் வைக்கலாமா? ஒரு சிறு தவறு, இன்றைக்கு வரலாற்றில் பேரழிவின் வடுவாக பதிவானதே மிச்சம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares