நீங்கள் பிறந்த கிழமை இதுவா? குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா?

ஜோதிடம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் 12 கட்டத்தில், 9 கிரகங்கள் அமைந்திருக்கும் அமைப்பைப் பொறுத்து அவருக்கு பலன் சொல்லப்படுகிறது.

அதோடு ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி ஆகும் போது அந்த ஜாதக தாரரின் ஜாதகத்திற்கு ஏற்ப அதாவது அவரின் ராசி, லக்கினத்திற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கக் கூடும்.

ஜோதிடம் என்பது பிரசன்ன ஜோதிடம், திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்க பின்பற்றுதல், எண் கணிதம், நாடி ஜோதிடம் என பல முறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரு மனிதனின் எதிர்காலத்தைக் கணிப்பதற்காகவும், அவர்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே தடுத்து காத்துக் கொள்ளும் வகையில் பார்க்கப்படுவதாகும்.

ஒருவர் பிறந்த கிழமையின் அடிப்படையில் அவருக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்றும், அது அவனின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக் கூடியதாக இருக்கும் என்கின்றன.

சரி வாருங்கள், ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஞாயிற்றுக் கிழமை

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர் சூரியனின் அருள் பெற்ற எதிலும் முன்னின்று வழிநடத்தக் கூடிய ஆட்சி செய்யக் கூடிய திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கடின வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்கக் கூடிய திறன் மிக்கவர்கள். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்ய தயங்காதவர்கள். சரியான பாதையில் நடக்கக்கூடியவர்கள்.

இவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளியில் சொல்லாமல், பிறருக்கு நன்மை செய்ய தயங்காதவர்கள். தன்னால் முடியாது என நினைத்தால் எந்த பேச்சும் இல்லாமல் அமைதி காப்பார்கள். இவர்கள் நிர்வாகத்தை நடத்தக் கூடிய மிக சிறப்பான மதிநுட்பத்தைப் பெற்றிருப்பார்கள்.
​திங்கட் கிழமை

குளுமையும், சாந்தமும் நிறைந்த சந்திரனைக் குறிக்கக் கூடிய திங்கட் கிழமையில் பிறந்தவர்கள் உண்மையில் சாந்தமும், அமைதி குணமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பார்க்க அழகாக, அனைவரையும் கவரக் கூடிய, ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளும், விடாமுயற்சியுடன் செயல்படக் கூடியவர்கள். பல வகையில் யோசிக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு நம்பிக்கையான நண்பர்கள் மற்றும் காதல் அமையும், புதுவித சிந்தனைகள் இவர்களிடம் இருக்கும்.

எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் நியாயப்படி செய்யக் கூடியவர்களாக, ஏமாற்றம் குணம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எவ்வளவு சாதிக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்வார்கள். இவர்கள் சொந்த தொழில் செய்யக் கூடிய திறமையுடனும், குளிர்ச்சியான தேகத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
​செவ்வாய்க் கிழமை

எதிலும் விடாமுயற்சி, கடின உழைப்பு, விட்டுக் கொடுக்காத என போர் குணம் பொருந்திய செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் தான் செயல்படுத்த இருக்கும் திட்டம் குறித்து பலரிடம் ஆலோசனைக் கேட்பார்கள். ஆனால் அதன் முடிவை தானே எடுத்து செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அதில் வெற்றியும் பெறக்கூடியவர்கள்.

ஒருவர் தன் மனதில் நல்லவர் என பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாகவும், கெட்டவர் என்றால் அவருக்கு கெட்டவராக இருப்பார்கள். ஒரு தன்னம்பிக்கை தரக் கூடிய பேச்சு இவர்களிடம் இருக்கும். நியாய, தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதால் பலருக்கு பிடிக்காது. ஆனால் அதைப்பற்றி எல்லாக் கண்டுகொள்ளாமல் தன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள்.
​புதன் கிழமை

கல்வியையும், செல்வத்தையும் தரக் கூடிய புதன் பகவானின் அம்சங்கள் நிறைந்த புதன் கிழமையில் பிறந்தவர்கள் நேர்மறையாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். எதிலும் உண்மையாக இருக்க நினைப்பார்கள். சிறந்த படிப்பு பெற்றிருப்பார்கள். ஜோதிடம், துப்பறியும் திறன், இயந்திரத் துறை என இவர்கள் கொடிகட்டிப் பறப்பார்கள்.

மற்றவர்களின் மனதில் இருக்கக் கூடிய எண்ணங்களை அறியக்கூடிய தனித்திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் சொல்ல வருவதை சரியாக சொல்லி விளங்க வைக்க வல்லவர்கள். இதனால் எழுத்தாளர், பேச்சாளர், மருத்துவர், நீதிபதி, பொறியாளர் என எந்த துறையிலும் சிறப்பாக மினுக்கிடுவார்கள். இவர்களின் பேச்சுத் திறன் எதிரியையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பதால், எளிதாக பலர் இவரை காதலிக்கக்கூடும்.

சரியான துறையை தேர்வு செய்து அதை திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கினால் வானமே எல்லையாகும்.
​வியாழக் கிழமை

குரு பகவானின் ஆசி பெற்ற வியாழக் கிழமையில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக, சொல்லித்தரக் கூடிய ஆற்றலுடன் இருப்பார்கள். குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் சற்று கோபப்படக் கூடியவர்களாக இருந்தாலும், பெரிய மனது படைத்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நேர்மையாளராக இருப்பதோடு, குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களையும் திருத்தி நேர் வழிப்படுத்துவார்கள்.

எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை உடையவர் என்பதால் சில நேரம் உங்களின் துணை மற்றும் சுற்றத்தாருக்கு மன வலியை கொடுப்பார்கள். உங்கள் காதலில் உண்மையும், அன்பும் நிறைந்திருக்கும்.
​வெள்ளிக்கிழமை

சுக்கிர பகவானின் அருள் ஆசி பெற்ற வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் சுட்டியாக இருந்தாலும் சமத்தானவர்களாக இருப்பார்கள். நல்ல தோற்றமும், தைரியமும் இருக்கும். அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல செயல்களை செய்வார்கள்.

இனிமையான பேச்சால் அனைவரையும் கவரக் கூடியவர்கள். தன் பேச்சை கேட்காதவர்களை புறக்கணிக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். இவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து முழுமனதோடு பிடித்து செய்யத் தொடங்கினால் வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் பணத்தை தேடி போக நேர்ந்தால் தோல்வி தான்.

தன் துணையிடமிருந்து அளவற்ற அன்பும், ஆதரவும் பெறுவார்கள். தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களையும் ஈடுபடுத்தி அதில் வெற்றி பெறுவார்கள்.
​சனிக்கிழமை

நீதிமான் சனி பகவானின் அருள் பெற்ற சனிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலியாக்க, பொறுமையாக இருப்பார்கள். சனி பகவானைப் போல தன் வேலையில் சரியாக முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பார்க்க அழகான, கவரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யக் கூடிய மனப்பாங்கு இருக்கும். அதோடு மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுத்து எதிலும் தோல்வி அடையக் கூடாது என்ற முழு முயற்சி, செயல்பாடு இருக்கும். தன்னை அழகாக வெளிப்படுத்துவார்கள்.

தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்கள். பெரியோர்களிடம் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares