சகல பாவங்களையும் தொலைக்கும் சக்தி அம்பிகையின் ஓரெழுத்து மந்திரத்திற்கு உண்டு. அதுவே ‘ஹ்ரீம்’ என்பது. அம்பாளின் நாமாக்களில் அது மிகவும் சிரேஷ்டமானது.

அதுவே
அம்பிகையின் நாமம், மந்திரம், இருப்பிடம், மேலும் ரூபமும் கூட இந்த புவனேஸ்வரி பீஜத்திற்கு உண்டு. திரிசதியில் 60 நாமாக்கள் ‘ஹ்ரீம்’ மந்திரத்தின் மகிமையைக் கூறினாலும், 99வது நாமம் அதுவே அவளது நாமம் என்று கூறுகின்றது.

அதுவே ‘ஓம் ஹ்ரீம் சீலாயை நம:’ என்பதாகும்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் 301வது நாமா ‘ஹ்ரீம் கார்யைநம’ என்பதே. எனவே நீ நாள்தோறும் ‘ஹ்ரீம்’ என்ற நாமத்தை உச்சரித்து வா.   விரைவில் அம்பிகையின் அருள் கிட்டி பிறவியின் கர்மம் தீர்ந்து ஆனந்தம்அடைவாய். இப்போது நீ இந்த மந்திரத்தை உபதேசமாகப் பெறுகிறாய், அதற்கு என்ன காரணம் தெரியுமா? நீ முற்பிறவிகளில் செய்த புண்ணியமேயாகும்” என்று கூறி சுந்தரத்தின் வலது காதில் ‘ஹ்ரீம்’ என்று உபதேசம் செய்து வைத்தார்.

உபதேசம் பெற்று வீடு திரும்பிய சுந்தரன் அன்று முதல் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து ‘ஹ்ரீம்’ பீஜத்தை உபாசித்து வந்தான். நாளடைவில் குடும்பத்தார் யாவரும், சத்நெறியில் திரும்பி ஒழுக்க சீலராயினர். மதுவும் மாமிசமும் மறைந்தது. பக்தியும் அருளும் நிறைந்தது.‘ஹ்ரீம்’ என்ற எழுத்து ஹ்,ர்,ஈ,ம் என்ற எழுத்துக்களின் சம்யுத்தம் ஆகும். ஹ்,ர்,ம் ஆகியன மெய் எழுத்துக்கள் ‘ஈ’ என்பது உயிர் எழுத்து. எனவே உயிர்மெய் சங்கமம் இதில் காணப்படுகிறது.

‘ஹர’ என்ற சிவனும், ஈஸ்வரிம் என்ற ‘ஈம்’ அட்சரமும் இதில் ஒன்றோடொன்று வேறுபாடின்றி ஐக்கியமாகி உள்ளன,” என்ற அபிராமி பட்டரிடம் ஒருவர், “சுவாமி! பூத்தவளே என்று இந்தப் பாடலை முடித்துள்ளீர்களே? அதன் பொருள் என்ன? என்று கேட்டார்”
புன்னகைத்த பட்டர்,“ அதுதானே அடுத்த பாடலின் முதற்சொல்லும்?” என்று கூறி பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே”என்ற முக்கியமான பாடல் பாடி விளக்கமளித்தார்.

“உலகங்களை என்றும் பாதுகாக்கிறவளே! அவை யாவற்றையும் தன்னுள்வயப்படுத்திக் கொள்பவளே! கழுத்தில் நீலம் தரித்த திருநீலகண்டனுக்கு முன் தோன்றியவளே! மூப்பு இல்லாதவளே! திருமாலின் தங்கையே!மாபெரும் தவத்தினில் சதா ஈடுபட்டிருப்பவளே! உன்னை விட்டு வேறொரு தெய்வத்தை நான் வணங்குவேனோ என்பது இதன் பொருள்,” என்று சொல்லவும், ஒரு பண்டிதர், “ஐயனே! முன் பாட்டில் ‘புவி ஏழையும் பூத்தவளே’ என்று பாடியுள்ளீர்கள். இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.புவி வேறு புவனம் வேறா? தயை கூர்ந்து விளக்க வேண்டும்” என்று கேட்டார்.உடனே பட்டர், “புவி, புவனம் என்பவை வேறு வேறு தான். பிரபஞ்சத்தில் ஏழு புவிகள் உள்ளன.

அவற்றையெல்லாம் உள்ளடக்கி விரிந்த புவனங்கள் பதினான்கு உள்ளன. இதைப் போன்ற எண்ணிலடங்கா கோடானு கோடி உலகங்களை அம்பிகை கண்மூடி கண் திறக்கும் நொடிப்பொழுதில் சிருஷ்டி செய்து, காப்பாற்றி பின் அழிக்கவும் செய்கிறாள். எனவே தான் ‘உன்மேஷ நிமிஷோத்பன்ன புவானாவல்லி” என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகிறது!” பண்டிதர் மீண்டும் வினவினார், “புவி ஏழும், புவனம் பதினான்கும் இருப்பது உண்மை தான் என்றால், அவற்றின் பெயர்கள் என்னவோ?” பட்டர் மிகுந்த பொறுமையுடன், “பண்டிதரே!புராணங்கள் கூறும் சான்றுகளிலிருந்து நாம் அறிவது என்னவெனில், புவி ஏழு என்று கூறக்கூடிய ஸ்ப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரளெஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும்.

புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தார்தலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹாலோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.” இதையடுத்து பண்டிதர், “பட்டரே! ‘கறைக் கண்டனுக்கு மூத்தவளே’ என்று பாடியுள்ளீர்களே? இது எப்படி சரியாகும்? அனைத்துக்கும் ஆதியானவன் பரமசிவனல்லவா? சிவத்துக்கும் மூத்தது ஒன்று அண்ட சராசரத்திலும் உண்டோ?” என்றார்.எல்லாரும் இதற்கு ஆர்வமாக பதில் கேட்க தயாராயினர்.
அபிராம பட்டர் கூறலாயினர்:“அன்பரே! இது ஒரு பிரம்ம ரகசியம். சிவமும், சக்தியும் ஒன்றேதான்; வேறு வேறு அல்ல. சலனமற்றிருக்கும் போது சிவமாகவும், சலனித்து பிரபஞ்சம்உண்டாகும் போது சக்தியாகவும் மாறும்.சிவமில்லையெனில் சக்தி இல்லை; சக்தி இல்லையெனில் சிவமில்லை. சிவசக்தி இல்லையெனில் எதுவுமே இல்லை!ஆலம் விதையிலிருந்து ஆலமரம் தோன்றி, அதினின்று பல விழுதுகள் தோன்றுவது போல, ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வர்ணம், பதம், மந்திரம் ஆகிய சக்தி தத்துவங்களும், தத்துவம், புவனம், கலை என்ற சிவ தத்துவங்களும் தோன்றின.

இதற்கு மூலமாய் அமைந்த பிரணவத்திற்கும் அதனின்று விரிந்த பதினெட்டு வித்தைகளுக்கும் மூலகாரணமாய் இருப்பவள் அம்பிகையே! அவளே சிவத்தின் அதிஷ்டானமாகின்றாள்.சிவசக்தி ஐக்கியமே பிரபஞ்ச சிருஷ்டிக்கும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களுக்கும் அடிப்படையாகின்றன.சக்தியின் அதிஷ்டானத்தாலேயே சிவம் நிற்பதால், சிவத்தின் அருள் சக்தியாகிய பராசக்தியே பிரதானம் எனவும் அதுவே பிரம்மம் என்றும் சாக்த சித்தாந்தம் கூறும்.

சிவத்திலிருந்தே சக்தி தோன்றியதால் சிவமே முதன்மையென்று சைவ சித்தாந்தம் போற்றும். ஆனாலும் இரண்டு சித்தாந்தங்களும் சிவசக்தி ஐக்கியம் என்று அறிக. அதனின்று சிவமும், சக்தியும் இரண்டானதால் பிரணவத்தை தாயாகப் பாவித்து, பிரணவ ஸ்வரூபிணியாக விளங்கும் அம்பிகையே‘கறைக் கண்டனுக்கு மூத்தவள்’ என்று பாடினேன்,” என்று முடித்தார்.மக்களும், மன்னனும் பலத்த கரவொலி எழுப்ப பண்டிதர் ஓடிச்சென்று அபிராமி பட்டரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

Sharing is caring!