நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன.

இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும். அத்துடன் நாங்கள் யாரையும் ஒழித்துக்கட்டவில்லை. வெள்ளை வேன் அச்சுறுத்தல்கள் அற்ற, நீதித்துறை மீதான நெருக்குதல் இல்லாத ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்கவே எதிர்பார்க்கிறோம்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் எமக்கு சர்வாதிகாரம் வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு, எமக்கு ஜனநாயகமும் ஒழுங்குமுறைகளுமே அவசியம். இவை இரண்டினூடாகவே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும்” என ரணில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!