அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க தயார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம்.

அதேபோன்று குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தாக்குதல்களில் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாயும், தாக்குதல்களால் பாரியளவில் காயமேற்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபாயும் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

எனினும் இந்தத் தாக்குதல்களை முன்னரே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் கூட, அரசாங்கத்தின் தவறினாலேயே அது தடுக்கப்படவில்லை.

எனவே வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்குவது போன்ற நட்டஈடு இதற்கும் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே தாக்குதல்களால் இறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் தலா 50 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 – 20 இலட்சம் ரூபாய் வரையிலும் வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை நிர்பந்திக்கின்றோம்.

அதேபோன்று தாக்குதல்களால் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களின் எதிர்காலத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!